செய்திகள்

கோல்டு வின்னர் எண்ணெய் நிறுவனம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு

Published On 2017-05-23 03:15 GMT   |   Update On 2017-05-23 03:15 GMT
கோல்டு வின்னர் எண்ணெய் நிறுவனம் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் அம்பலம் ஆகி உள்ளது.
சென்னை:

காளீஸ்வரி ரீ-பைனரி நிறுவனம் கோல்டு வின்னர் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தில் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள காளீஸ்வரி ரீ-பைனரி நிறுவனத்தின் தலைமை அலுவலகம், உரிமையாளர் முனுசாமி இல்லம் மற்றும் எண்ணெய் உற்பத்தி ஆலைகள், சேமிப்பு கிடங்குகள், ஏஜெண்டு அலுவலகங்கள் என தமிழ்நாட்டில் 46 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 54 இடங்களில் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.



200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று கடந்த 17-ந் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் வருமான வரி புலனாய்வு பிரிவு கூடுதல் கமிஷனர் ஜெயராகவன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

காளீஸ்வரி ரீ-பைனரி நிறுவனத்தின் வரவு-செலவு கணக்குகள், எண்ணெய் உற்பத்தி, வெளிநாட்டு ஏற்றுமதி போன்ற ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆராய்ந்தனர். இதில் அந்த நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான ஆதாரங்கள் சிக்கியது. எனினும் வரி ஏய்ப்பு மூலம் எத்தனை கோடி முறைகேடு நடந்துள்ளது என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் காளீஸ்வரி ரீ-பைனரி நிறுவனத்தில் நடந்த சோதனை முடிந்தது. இதில் அந்த நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.90 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக நேற்று தகவல் வெளியானது. இதுகுறித்து வருமான வரித்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளது உண்மை தான். ஆனால் எவ்வளவு என்பதை வெளியிட முடியாது என்று கூறினர்.

இந்த நிலையில் வரி ஏய்ப்பு செய்த தொகையையும், அதற்கான அபராத தொகையையும் செலுத்திவிடுவதாக காளீஸ்வரி ரீ-பைனரி நிறுவனம் வருமான வரி புலனாய்வு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News