செய்திகள்

அரியலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2017-05-13 16:22 IST   |   Update On 2017-05-13 16:22:00 IST
அரியலூர் அருகே குடிநீர் கேட்டு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் கள்ளுர் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு ஊராட்சி சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த சிலமாதங்களாக குடிநீர் சரியாக வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தியும், கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டியும் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் காலிகுடங்களுடன் அரியலூர் - தஞ்சாவூர் சாலையில் கள்ளுர் பேருந்து நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சிகள் உதவி இயக்குனர் பழனிசாமி, தாசில்தார் முத்துகிருஷ்ணன் மற்றும் டி.எஸ்.பி (பொறுப்பு) சோமசேகர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விரைவில் கிராமத்தில் தண்ணீர் உள்ள இடம் கண்டறிந்து ஆழ்துளை கிணறு அமைத்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படும். மேலும், கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்க உரிய முன்மொழிவுகள் தயார் செய்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்படும் எனக் கூறியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இதனால் தஞ்சாவூர்-அரியலூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில வாகனங்கள் மாற்றுவழியில் திருப்பிவிடப்பட்டது.

Similar News