செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2017-05-10 17:56 IST   |   Update On 2017-05-10 17:56:00 IST
ஜெயங்கொண்டம் அருகில் உள்ள பொன்னேரி கரையில் டாஸ்மாக் கடைஅமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே மாமன்னன் ராஜேந்திரசோழனால் வெட்டப்பட்ட சோழகங்கம் என்ற பொன்னேரியிலிருந்து பிச்சனூர் செல்லும் சாலையில் கரை ஓரத்தில் டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகளால் இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த இடத்தில் இரவு நேரங்களில் வெளியூர்களிலிருந்து வரும் பொதுமக்கள் பேருந்திலிருந்து இறங்கி பிச்சனூர், பூவாயிகுளம், கொக்கரனை, இடைக்கட்டு உள்ளிட்ட கிராமங்களுக்கு நடந்து செல்லும் பாதையாக உள்ளது.

இதனால் பலவிதமான பிரச்னைகளும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போகும் என கூறி பொன்னேரியை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள், சிறுவர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். மீண்டும் கடை திறக்கப்பட்டால் பெரிய அளவிலான போராட்டம் தொடரும் எனவும் கூறியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு பூவாயிகுளம் கண்ணன் தலைமைவகித்தார். குருவாலப்பர்கோவில் முல்லைநாதன் துவக்கி வைத்தார். அண்ணாதுரை, உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் குருவாலப்பர்கோவில் ராமதாஸ் நன்றி கூறினார்.

Similar News