செய்திகள்

செங்குன்றம் காவலாளி கொலையில் 4 பேர் கைது

Published On 2017-05-08 15:19 IST   |   Update On 2017-05-08 15:19:00 IST
செங்குன்றம் காவலாளி வீட்டு சுவரை தாண்டி குதித்த போது வாசலில் தூங்கிய சண்முகவேல் எழுந்து விட்டார். அவர் எங்களை பிடிக்க முயன்றதால் அவரை வெட்டி கொன்றோம் என்று கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
செங்குன்றம்:

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர், ஜோதிநகர், ராம்நகரில் வசித்து வந்தவர் சண்முகவேல் (54). காவலாளி.

கடந்த 28-ந் தேதி அவர் காற்றுக்காக வீட்டி வாசலில் தூங்கினார். அவரது மனைவி, மகன் ஆகியோர் வீட்டின் உள்ளே தூங்கினர்.

நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் சண்முகவேலை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய பாடிய நல்லூர் ஜோதிநகரை சேர்ந்த முனுசாமி, பார்த்திபன், பாலசுப்பிரமணி, வியாசர்பாடி நாகராஜ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். கொள்ளை முயற்சியில் கொலை நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து கைதானவர்கள் கூறி இருப்பதாவது:-

சண்முகவேலின் வீடு தனியாக உள்ளது. எனவே அவரது வீட்டில் கொள்ளையடிக்க சம்பவத்தன்று இரவு சென்றோம்.

சுவரை தாண்டி குதித்த போது வீட்டுவாசலில் தூங்கிய சண்முகவேல் எழுந்து விட்டார். அவர் எங்களை பிடிக்க முயன்றார். இதையடுத்து அவரை வெட்டி கொன்றோம்.

மேலும் அவரது வீட்டின் கதவை தட்டி உள்ளே செல்ல முடிவு செய்து இருந்தோம். அந்த நேரத்தில் சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிளில் சிலர் சென்றதால் கொள்ளையடிக்காமல் தப்பி சென்றுவிட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Similar News