செய்திகள்

தாம்பரம் விமான படை தளத்தில் பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Published On 2017-05-04 10:58 IST   |   Update On 2017-05-04 10:58:00 IST
தாம்பரம் விமான படை தளத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கரணை:

உத்தரப்பிரதேச மாநிலம் ‌ஷம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குல்பீர்சிங் (வயது23). இவர் விமானப்படை பிரிவில் கடந்த 2013ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.

அசாமில் வேலை பார்த்து வந்த குல்பீர்சிங்கை 6 மாத பயிற்சிக்காக தாம்பரம் விமானப்படை தளத்துக்கு மாற்றினர்.

இங்கு வந்த குல்பீர்சிங் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். நேற்று இரவு அவருக்கு விமானப்படை தள ஓடு பாதையில் பாதுகாப்பு பணி வழங்கப்பட்டது.

துப்பாக்கியுடன் குல்பீர் சிங் நடந்தபடி பாதுகாப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இரவு 7.30 மணிக்கு திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அங்கு சென்று பார்த்த போது குல்பீர்சிங் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.


இதுகுறித்து சேலையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தக்கு வந்து குல் பீர்சிங் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் தங்கியிருந்த அறையில் கடிதம் ஏதாவது எழுதி வைத்து உள்ளாரா? என்று சோதனை செய்தனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.

குல்பீர்சிங்கின் செல்போனை கைப்பற்றி யார்- யாரிடம் பேசினார் என்று விசாரிக்கிறார்கள்.

Similar News