செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம்

Published On 2017-05-02 21:43 IST   |   Update On 2017-05-02 21:43:00 IST
அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமரைக்குளம்:

முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு ஆகிய படிப்புகளுக்கு அனைத்து அரசு டாக்டர்களுக்கும் 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான முதுகலை மருத்துவ பட்டப்படிப்பிற்கான தேர்வை தமிழக அரசே நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் கிராமப்புற அரசு டாக்டர்கள் மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனை டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதே கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரியலூர் பஸ் நிலையம் முன்பு பந்தல் அமைத்து அரசு டாக்டர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு டாக்டர் கொளஞ்சிநாதன் தலைமை தாங்கினார். அருண் பிரசன்னா விளக்க உரையாற்றினார்.

அப்போது டாக்டர்கள் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும். 3-ந் தேதி (நாளை) முதல் அரசு மருத்துவமனைகளில் திட்டமிட்ட அறுவைசிகிச்சைகள் நிறுத்தப்படும். அவசர சிகிச்சை பிரிவு வழக்கம் போல செயல்படும். 8-ந் தேதி பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். அதன்பிறகும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் 10-ந் தேதி முதல் அனைத்து அரசு டாக்டர்களும் விடுப்பில் செல்ல உள்ளோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். முடிவில் ராஜ் பரத் நன்றி கூறினார். 

Similar News