செந்துறை பகுதியில் ஏ.டி.எம்.கார்டை மாற்றி பண மோசடி-வாலிபர் கைது
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி அம்புசம்(44). இவர் அதே ஊரில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 8-ந்தேதி செந்துறை எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் தனது கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது என பார்த்துள்ளார்.இவர் பார்க்க நேரம் ஆனதால் பின்னால் இருந்த பிலாக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சுந்தராஜன் (30) தான் பார்த்து தருவதாக கூறி ஏ.டி.எம். கார்டை வாங்கி வங்கி இருப்பு 57000 இருப்பதாக கூறி கார்டை மாற்றி கொடுத்து விட்டு உடனே வெளியேறி விட்டார்.
சற்று நேரத்தில் தனது வங்கி கணக்கில் பணம் எடுத்த தகவல் அம்புசம் மொபைலுக்கு வந்தது. என்ன நடந்தது என யூகிப்பதற்குள் அவர் கணக்கிலிருந்து தனியார் ஏடிஎம்.மில் ரூபாய் 40000 எடுத்ததாக தகவல் வந்தது.
பின்னர் தான் அவர் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டு அவருடையது அல்ல என்பது தெரியவந்தது.இது குறித்து செந்துறை காவல் நிலையத்தில் அம்புசம் புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சுந்தராஜனை கைது செய்தனர். மேலும் அவர் பலரிடம் ஏ.டி.எம்.கார்டை மாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.