செய்திகள்
ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
ஜெயங்கொண்டம் அருகே மதம் மாறி திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதிகள் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் நேற்று தஞ்சமடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நின்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் ராஜதுரை(23). இவர், திருச்சியிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்துள்ளார். அப்போது அதே கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு படித்து வந்த நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள தோப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த சுல்தானுல் ஆரிபின் மகள் சர்மிளா ராஹில் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்களுடைய காதல் சர்மிளாராஹில் வீட்டாருக்கு தெரியவந்ததையடுத்து இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளனர். இதையடுத்து சர்மிளா ராஹில் கல்லூரிக்கு செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 24-ம் தேதி திருச்சி தென்னூரில் உள்ள முஸ்லீம் டெவலப்மெண்ட் பவுண்டேஷன் டிரஸ்ட் மூலம் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர், நின்னியூர் சென்று குடும்பம் நடத்தி வருகின்றனர். இது குறித்த தகவல் அறிந்த சர்மிளாராஹில் பெற்றோர் தொலைபேசி மூலம் இருவரையும் தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும் திருச்சியில் திருமணம் செய்துகொண்டதால் கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். இதனையறிந்த காதல் தம்பதிகள் பாதுகாப்பு கேட்டு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.