செய்திகள்

சென்னை, மும்பை, ஐதராபாத்தில் விமானத்தை கடத்தி தகர்ப்பதாக மிரட்டல்

Published On 2017-04-16 12:49 IST   |   Update On 2017-04-16 15:05:00 IST
மும்பை, சென்னை, ஐதராபாத் ஆகிய மூன்று விமான நிலையங்களில் ஏதாவது, ஒரு இடத்தில் இருந்து புறப்படும் விமானத்தை கடத்தி தகர்ப்பதாக மிரட்டல் வந்துள்ளதால். மூன்று விமான நிலையங்களுக்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஆலந்தூர்:

மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று நள்ளிரவு மர்ம வாலிபர் தொலைபேசியில் பேசினார்.

அப்போது “மும்பை, சென்னை, ஐதராபாத் ஆகிய மூன்று விமான நிலையங்களில் ஏதாவது, ஒரு இடத்தில் இருந்து புறப்படும் விமானத்தை தீவிரவாதிகள் கடத்த உள்ளனர்.

மேலும் அதனை நடுவானில் வெடிக்க வைக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். முடிந்தால் காப்பாற்றி கொள்ளுங்கள்” என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டான்.


இதே போல் இ-மெயில் மூலமும் விமானத்தை கடத்த போவதாக தகவல் கிடைத்தது. பெண் ஒருவர் அனுப்பிய அந்த தகவலில் 6 வாலிபர்கள் விமானத்தை கடத்தபோவதாக கூறியதை தான் கேட்டதாக அதில் தெரிவித்து இருந்தார்.

இந்த மிரட்டலை தொடர்ந்து சென்னை, மும்பை , ஐதராபாத் ஆகிய 3 விமான நிலைய அதிகாரிகளுக்கும் , மத்திய உளவுத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சென்னை, மும்பை, ஐதராபாத் விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அவர்கள் உத்தரவிட்டனர்.


இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. பாதுகாப்பு பணியில் கூடுதல் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

வெளிநாட்டு முனையம், உள்நாட்டு முனையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் கூடுதல் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால். சென்னை விமான நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது.

பாதுகாப்பு கருதி சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரு நாள் மட்டும் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.


சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் உள்ளதா. என்பது குறித்து கண்காணிப்பு கேமிரா மற்றும் ரோந்து பணி மூலம் போலீசார் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இதே போல் மும்பை, ஐதராபாத் விமான நிலையத்திலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Similar News