செய்திகள்

வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் கைது

Published On 2017-04-15 03:14 GMT   |   Update On 2017-04-15 03:14 GMT
அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுரோடு-எட்டயபுரம் ரோடு சந்திப்பில் அம்பேத்கர் சிலை அமைந்துள்ளது. நேற்று அவரது பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் திடீரென இரட்டைக்குழல் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டார்.

இதனால் அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈரால் ஆர்.சி. தெருவை சேர்ந்த பவுல்ராஜ் (வயது 31) என்பதும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரராக பணியாற்றி வரும் இவர், தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்ததும் தெரியவந்தது.

மேலும், அம்பேத்கர் மீது கொண்ட அளவில்லாத பற்று காரணமாக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மரியாதை செலுத்தியதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பவுல்ராஜை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார், தங்களது சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

Similar News