செய்திகள்

நிலத்தை அளப்பதற்கு லஞ்சம் வாங்கிய நில அளவையர், தலையாரிக்கு தலா 3 ஆண்டு ஜெயில்: நெல்லை கோர்ட்டு தீர்ப்பு

Published On 2017-04-12 15:39 IST   |   Update On 2017-04-12 15:39:00 IST
தென்காசி அருகே நிலத்தை அளப்பதற்கு லஞ்சம் வாங்கிய நில அளவையர், தலையாரிக்கு தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளத்துரை பாண்டியன் (வயது40), விவசாயி. இவருக்கு சொந்தமாக இலஞ்சியில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் ரோட்டில் 66 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அளந்து விற்பனை செய்ய வெள்ளத்துரை பாண்டியன் ஏற்பாடு செய்தார். இதையடுத்து நிலத்தை அளப்பதற்கு தென்காசி தாலுகா அலுவலகத்துக்கு விண்ணப்பிக்க சென்றார்.

அங்கு பணியில் இருந்த தென்காசி வலசையை சேர்ந்த நில அளவையர் தம்பிதுரை, இலஞ்சியை சேர்ந்த தலையாரி சக்திவேல் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது நிலத்தை அளந்து தருவதற்கு தங்களுக்கு மொத்தமாக ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று வெள்ளத்துரை பாண்டியனிடம் கேட்டனர்.

அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத வெள்ளத்துரை பாண்டியன் நெல்லை லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார். அதன்படி கடந்த 5.5.2009-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஏற்பாட்டின்படி ரசாயன பொடி தடவிய 5 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுகளை தம்பிதுரை, சக்திவேல் ஆகியோரிடம் வெள்ளத்துரை பாண்டியன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தம்பிதுரை, சக்திவேலை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நெல்லை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி ஜெயசிங் வழக்கை விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தார். அதில் நில அளவையர் தம்பிதுரை மற்றும் தலையாரி சக்திவேல் ஆகிய 2 பேருக்கும் தலா 3 ஆண்டு ஜெயில் தண்டனை யும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Similar News