செய்திகள்

ஆம்னி பஸ் மோதி பெண் துப்புரவு தொழிலாளி பலி: டிரைவர் கைது

Published On 2017-04-10 09:32 GMT   |   Update On 2017-04-10 09:32 GMT
மதுரையில் இன்று காலையில் நடந்த விபத்தில் பெண் துப்புரவு தொழிலாளி பலியானார். ஆம்னி பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரையில் உள்ள கீழ்மதுரை அரிஜன காலனியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வேலம்மாள் (வயது32). கணவன்-மனைவி இருவரும் தத்தனேரி பகுதியில் துப்புரவு தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகிறார்கள்.

இன்று காலை வேலைக்கு இருவரும் வீட்டில் இருந்து ஒரு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். முனிச்சாலை சந்திப்பில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக பெரியார் பஸ் நிலையத்தை நோக்கி வந்த ஆம்னி பஸ் மொபட் மீது மோதியது.

இதனால் மொபட்டில் பின்னால் இருந்த வேலம்மாள் தூக்கி வீசப்பட்டார். பலத்த காயம் அடைந்த அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியானார். லேசான காயத்துடன் முருகன் உயிர் தப்பினார்.

தன் கண் முன்னே விபத்தில் மனைவி இறந்ததை கண்டு முருகன் கதறி அழுதார். இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நகர் போக்கு வரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆம்னி பஸ் டிரைவர் தேனி மாவட்டம் முத்துதேவன்பட்டியை சேர்ந்த செல்லப்பாண்டியை (33) கைது செய்து விசாரணை நடத்தினர்.

சென்னையில் இருந்து நெல்லைக்கு சென்ற ஆம்னி பஸ்சில் மதுரையை சேர்ந்த சிலர் பயணம் செய்தனர். அவர்களை பெரியார் பஸ் நிலையத்தில் இறக்கி விடுவதற்காக விதியை மீறி விரகனூர் ரிங் ரோட்டில் இருந்து தெப்பக்குளம், முனிச்சாலை வழியாக வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

சமீப காலமாக விதிகளை மீறி பல ஷேர்ஆட்டோக்கள் நகருக்குள் அசுர வேகத்தில் செல்வதாலும் அவ்வப் போது விபத்துக்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே விதிமுறைகளை மீறி செயல்படும் ஆம்னி பஸ், ஷேர்ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News