செய்திகள்

“சாமி கும்பிட்டாச்சா?” என்றால் “பணம் வாங்கியாச்சா?” என்று அர்த்தம்

Published On 2017-04-06 16:37 IST   |   Update On 2017-04-06 16:37:00 IST
ஆர்.கே.நகர் தொகுதியில் சாமி கும்பிட்டாச்சா என்றால் பணம் வாங்கியாச்சா என்ற சங்கேத வார்த்தையை பயன்படுத்தி உள்ளனர்.
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வினியோகம் செய்யப்பட்டது.

அந்த தொகுதியில் மொத்தம் சுமார் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் நேற்று முன்தினம் மட்டும் 1 லட்சம் பேருக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதாக தெரிய வந்துள்ளது.

பணப்பட்டு வாடாவைத் தடுக்க தலைமை தேர்தல் கமி‌ஷன் 35 பார்வையாளர்கள், 10 பறக்கும் படைகள் உள்பட பல ஏற்பாடுகளை செய்திருந்தது. ஆனால் அவை அனைத்தையும் மீறி மிகத் திறமையாக பணப்பட்டுவாடா நடத்தப்பட்டுள்ளது. இதற்கு “சங்கேத வார்த்தை”யை பயன்படுத்தி உள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகளும் முகாமிட்டுள்ளனர். அவர்களையும் திணறடிக்கும் வகையில் அந்த “சங்கேத வார்த்தை” இருந்தது. நேற்று மதியம் தான் அந்த சங்கேத வார்த்தையை தேர்தல் அதிகாரிகளும் வருமான வரித்துறை அதிகாரிகளும் கண்டு பிடித்தனர்.

“சாமி கும்பிட்டாச்சா?” என்பதே அந்த சங்கேத வார்த்தையாகும். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாடகை வீடுகளில் தங்கியுள்ள வெளியூர் அரசியல் கட்சி பிரமுகர்கள் சிரித்த முகத்துடன் அந்த பகுதி மக்களிடம் “என்ன... சாமி கும்பிட்டாச்சா?” என்றனர்.

பெரும்பாலானவர்கள் “ஆமா... சாமி கும்பிட்டாச்சு” என்று கூறியபடி நகர்ந்தனர். டீ கடைகளில் இந்த சங்கேத வார்த்தை பரிமாற்றம் அதிகமாக கேட்டது.

பணத்தை பொதுவாக லட்சுமி என்று சொல்வார்கள். எனவேதான் பணப்பட்டு வாடாவில் ஈடுபட்டவர்கள் இந்த சங்கேத வார்த்தையை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பணம் கிடைக்காதவர்கள், “இன்னும் சாமியையே காணோம்... எப்படி கும்பிடுவது?” என்று கூறி கொண்டிருக்கிறார்கள். எனவே ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அடுத்தக்கட்டமாக மீண்டும் ஒரு ரவுண்டு சாமி கும்பிட தயாராகி கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அடுத்த தடவை பணப்பட்டு வாடாவுக்கு வேறு சங்கேத வார்த்தையை பயன்படுத்த உள்ளார்களாம்.

Similar News