செய்திகள்
திருப்பத்தூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை
திருப்பத்தூர் அருகே வாலிபர் அரிவாள் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரை கொலை செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள தளக்காவூர் கிராமத்தில் கருப்பாயி பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் இன்று காலை, சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நாச்சியார்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிணமாக கிடந்தவர் உடலில் 13 இடங்களில் அரிவாள் வெட்டு இருந்தது. அவரை மர்ம ஆசாமிகள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். கொலையானவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளையும் தேடி வருகின்றனர்.