செய்திகள்

பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்கக்கோரி வழக்கு: கலெக்டர் பரிசீலிக்க, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-03-30 22:38 IST   |   Update On 2017-03-30 22:38:00 IST
திருப்பத்தூர் தாலுகா உலகம்பட்டியில் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்கக்கோரி தொடர்ந்த வழக்கில் கலெக்டர் பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை:

சிங்கம்புணரி அருகே உள்ள உலகம்பட்டியைச் சேர்ந்தவர் சிவராமன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:–

சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம் உலகம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 250 மாணவ– மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி கட்டிடம் பழுதடைந்துள்ளதாக கூறி அங்குள்ள சமுதாய நலக்கூடத்துக்கு பள்ளியை மாற்றினர்.

பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை ஓரிரு மாதங்களில் கட்டி முடித்து விடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இன்று வரை பள்ளிக்கட்டிடத்தை சீரமைக்க எந்த பணியும் மேற்கொள்ளப்படவில்லை.

சமுதாயக்கூடத்தில் மாணவ–மாணவிகளுக்கு கழிப்பறை வசதி இல்லை. அந்த பகுதியில் உள்ள திறந்த வெளியையே கழிப்பிடமாக மாணவ–மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். தனித்தனி அறைகள் எதுவுமின்றி ஒரே இடத்தில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ–மாணவிகளும் படித்து வருகின்றனர்.

இதனால் மாணவ–மாணவிகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைத்து அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சிவகங்கை கலெக்டர், மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி ஆகியோருக்கு 2.12.2016 அன்று மனு கொடுத்தோம்.

அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் முத்தால்ராஜ், பழனியாண்டி ஆஜராகி வாதாடினார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் மனுவை சிவகங்கை கலெக்டர் ஒரு மாதத்துக்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Similar News