செய்திகள்

டி.என்.பாளையம் அருகே கரடியை வேட்டையாடி இறைச்சி கடத்திய 4 பேர் கைது

Published On 2017-03-27 15:38 IST   |   Update On 2017-03-27 15:38:00 IST
டி.என்.பாளையம் அருகே கரடியை வேட்டையாடி இறைச்சி கடத்திய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
டி.என்.பாளையம்:

ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் வன சரகத்துக்குட்பட்ட மாக்கம் பாளையத்தில் டி.என். பாளையம் வன சரகர் சிவ சுப்பிரமணி, வனவர் முத்துசாமி, வன காப்பாளர் வேணுகோபால் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 4 பேர் ஒரு சாக்கு பையுடன் சென்று கொண்டிருந்தனர். சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

இதனால் மேலும் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை வாங்கி பிரித்து பார்த்தனர். அப்போது அந்த சாக்கு பையில் கரடி இறைச்சி இருந்தது தெரிய வந்தது.

அவர்கள் காட்டுக்குள் ‘கண்ணி’ வைத்து கரடியை வேட்டையாடி கொன்று அதன் இறைச்சியை விற்க கொண்டு சென்றது தெரிய வந்தது.

மாக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த மாதப்பன் (வயது 60), பிரகாஷ் (34), முருகன் (39), திவேந்திரன் (23) என்ற 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

Similar News