செய்திகள்

கடலூரில் அரசு வக்கீல்களுக்கு கணினி பயிற்சி: போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

Published On 2017-03-26 15:24 GMT   |   Update On 2017-03-26 15:24 GMT
கடலூரில் அரசு வக்கீல்களுக்கு கணினி பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தொடங்கி வைத்தார்.
கடலூர்:

இந்தியா முழுவதிலும் உள்ள போலீஸ் நிலையங்களை கணினிமயாக்கும் திட்டத்தின் அடிப்படையில் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் இணைதளம் மூலம் கடந்த 5–6–2013–ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை கையால் எழுதப்பட்டு வந்த முதல் தகவல் அறிக்கை முற்றிலும் ஒழிக்கப்பட்டு கடந்த 15–4–2016 முதல் கணினி மூலம் அச்சிடப்பட்ட பிரதிகளே நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

மேலும் காணாமல் போன ஆவணங்களை பற்றி இணைதளத்தின் மூலம் தெரிவிக்கலாம். போலீஸ் விசாரணைக்கான இணையதள விண்ணப்பம், சொந்த வாகனங்களுக்கான தடையில்லா சான்று, பொது கூட்டங்கள் நடத்துவதற்கான அனுமதி விண்ணப்பம் ஆகியவை இணைதள சேவை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இணைதளம் மூலம் வழங்கப்படும் சேவைகள் மற்றும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் இணையதளம் குறித்து அரசு வக்கீல்களுக்கான கணினி பயிற்சி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கணினி பயிற்சி அறையில் நடைபெற்றது. இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

அரசு வழக்குறைஞர்கள் துணை இயக்குனர் அம்ஜத்அலி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் மற்றும் அரசு வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Similar News