சீர்காழி அருகே விவசாயி வீட்டில் 12 பவுன் நகைகள்- பணம் கொள்ளை
சீர்காழி:
சீர்காழியை அடுத்த கீழமாத்தூர் தேரடி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது65). விவசாயி. மகன்கள் வெளியூரில் இருப்பதால் மனைவியுடன் இங்கு வசித்து வருகிறார்.
நேற்று இரவு காற்றுக்காக வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் திண்ணையில் படுத்து தூங்கி உள்ளார். பின்னர் இன்று காலை எழுந்து அவர்கள் வீட்டிற்குள் சென்றபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு திடுக்கிட்டனர். இதையடுத்து அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த 12 பவுன் நகைகள், ரூ.32 ஆயிரம் ரொக்கம் மற்றும் ½ கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ராமலிங்கம் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.