செய்திகள்

மயிலாடுதுறையில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Published On 2017-03-24 17:06 IST   |   Update On 2017-03-24 17:06:00 IST
மயிலாடுதுறையில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதல் மனைவி கலைச்செல்வி கணவர் மற்றும் அவருடைய 2-வது மனைவி மீது போலீசில் புகார் செய்துள்ளார்.

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி கலைச்செல்வி (வயது 32), இவர்களுக்கு லாவண்யா (வயது 15) என்ற மகளும், ஒரு மகனும் இருந்தனர். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் பிரிந்து விட்டனர்.

இதனால் முருகேசன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தந்தையுடன் வசித்து வந்த லாவண்யா, தருமபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற இருந்ததால் விடியற்காலை லாவண்யாவை தேர்வுக்கு படிப்பதற்கு அவருடைய தந்தை எழுப்ப சென்றார்.

அப்போது லாவண்யா வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மாதிரிமங்கலத்தில் இருக்கும் லாவண்யாவின் தாய் கலைசெல்விக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கிருந்து விரைந்து வந்து கலைச்செல்வி, மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

பின்னர் இதுகுறித்து கலைச்செல்வி, மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மனுவில், எனது கணவரும், அவரின் 2-வது மனைவியும் சேர்ந்து எனது மகளுக்கு கொடுத்த மனஉளைச்சலால் அவள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளாள். எனவே போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து லாவண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News