செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் அருகே தறிகெட்டு ஓடிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது: வாலிபர் படுகாயம்

Published On 2017-03-19 17:16 GMT   |   Update On 2017-03-19 17:16 GMT
ஸ்ரீமுஷ்ணம் அருகே தறிகெட்டு ஓடிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
ஸ்ரீமுஷ்ணம்:

விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை யூரியா உரமூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேத்தியாத்தோப்பு நோக்கி புறப்பட்டது. லாரியை விருத்தாசலம் ஆலடி பகுதியை சேர்ந்த அரசன் மகன் பழனிவேல் (வயது 37) என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் ஸ்ரீமுஷ்ணம் தனியார் கல்லூரி அருகே வந்த போது அங்குள்ள ஒரு வளையில் பழனிவேல் லாரியை திருப்பினார்.

அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த மாரியப்பன்(22) என்பவர் மீது லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில்  கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த மாரியப்பன் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீமுஷ்ணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மாரியப்பனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்தில் லாரி டிரைவர் பழனிவேல் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News