செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக கனமழை: அணைகளின் நீர்மட்டம் 4 அடி வரை உயர்ந்தது

Published On 2017-03-16 13:40 GMT   |   Update On 2017-03-16 13:40 GMT
நீலகிரி மாவட்டத்தில் நேற்று பரவலாக கனமழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

குன்னூர்:

நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை பொய்த்தால் வறட்சி நிலவியது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டது.வனப்பகுதிகளில் இருந்து இரை மற்றும் தண்ணீரை தேடி வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் கனமழை பெய்தது.

குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

இதில் கெத்தையில் அதிகபட்சமாக 204 மில்லி மீட்டர் மழை பதிவானது. கோத்தகிரியில் ஹோப்பார்க் பகுதியில் வீடுகளில் மழை தண்ணீர் புகுந்தது. முத்தோரை, பாலடா பகுதிகளில் விவசாய நிலங்களில் மழை தண்ணீர் புகுந்தது. இதனால் கேரட், முட்டை கோஸ் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

குன்னூர் பகுதியில் பெய்த மழையால் மண்சரிவு ஏற்பட்டது. குன்னூர்- மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் கல்லார் முதல் ரன்னிமேடு வரை 5 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது, இதனால் மலை ரெயில் நிறுத்தப்பட்டது, பின்னர் ஊழியர்கள், ரெயில் பாதையில் கிடந்த மண் மற்றும் கற்களை அப்புறப்படுத்தினர். இதனால் 45 நிமிடம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

குந்தா, கெத்தை, பர்லி, முள்ளி, காமராஜ் சாகர், எமரால்டு, அவலாஞ்சி ஆகிய அணைக்கட்டுகளில் 3 அடி முதல் 4 அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

நேற்றும் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இரவில் ஊட்டி, கூடலூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் மழை பெய்தது.

Similar News