செய்திகள்

செங்கல்பட்டு அருகே மாணவனை ஏமாற்றி நகை - பணம் கொள்ளை

Published On 2017-03-16 15:45 IST   |   Update On 2017-03-16 15:45:00 IST
செங்கல்பட்டு அருகே மாணவனை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டை அடுத்த திருமணி ஆலன் சாலையை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி மணியம்மாள். இவர்கள் இருவரும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள்.

இவர்களது மகன் லோகேஷ். 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர். லோகேசுக்கு நேற்று தேர்வு இல்லாததால் வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். மாலை 4 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம ஆசாமிகள் அங்கு வந்தனர். அவர்கள் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டு வீட்டுக்குள் சென்றனர்.

பின்னர் இருவரும் உனது தாயார் மார்க்கெட்டில் நிற்கிறார். வீட்டில் உள்ள நகை, பணத்தை வாங்கி வருமாறு எங்களை அனுப்பி வைத்தார் என்று மயக்கும் வகையில் பேசினார்.

அவர்களின் பேச்சில் மயங்கிய லோகேஷ் பீரோவை திறந்து அதில் இருந்த 36 பவுன் நகை, ரூ. 53 ஆயிரத்து 600 பணத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார். அதை வாங்கியதும் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

மாலையில் வேலை முடிந்து மணியும் அவரது மனைவியும் வீடு திரும்பிய போது தான் மகனை ஏமாற்றி நகை-பணத்தை கொள்ளையடித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News