செய்திகள்

ஈஞ்சம்பாக்கத்தில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 2 பேர் பலி

Published On 2017-03-09 08:56 IST   |   Update On 2017-03-09 08:56:00 IST
ஈஞ்சம்பாக்கத்தில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
ஆலந்தூர்:

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரைச் சேர்ந்தவர் சஜன்(வயது 23). பெயிண்டர். இவருடைய நண்பர் லோகேஷ்(24). நேற்று மாலை நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் சாலையின் மறுபுறம் செல்ல முயன்றனர். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் அவர்கள் 2 பேர் மீதும் ஏறி இறங்கியது. இதில் சஜன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயத்துடன் உயிருக்கு போராடிய லோகேசை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் பக்தவச்சலம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News