செய்திகள்

எரிவாயு திட்டம்: மத்திய அரசின் சமரசத்தை ஏற்க மாட்டோம் - இளைஞர்கள், மாணவர்கள் அறிவிப்பு

Published On 2017-02-28 12:01 IST   |   Update On 2017-02-28 13:06:00 IST
ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் மத்திய அரசின் சமரசத்தை ஏற்க மாட்டோம் என்று இளைஞர்கள் - மாணவர்கள் மற்றும் நெடுவாசல் கிராம போராட்ட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு திட்டத்தை எதிர்த்து 14 நாட்களாக தீவிர போராட்டம் நடந்து வருகிறது.

இத்திட்டம் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட கிராம பகுதிகளில் விவசாயிகளிடம் பல ஏக்கர் நிலத்தை ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குத்தகைக்கு எடுத்தது.



அதில் எண்ணெய் வளங்கள் பற்றி ஆய்வு செய்யப் போவதாகவும், மண் எண்ணெய் எடுக்கப் போவதாகவும் அப்பகுதி விவசாயிகளிடம் தெரிவித்தனர்.

அங்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து எண்ணெய், எரிவாயுவை எடுத்து சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் ஆழ்குழாயில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு குழாய்களை அடைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கிய பின்னரே ஹைட்ரோ கார்பன் குறித்து வெளியே தெரிய வந்தது. இந்த திட்டம் நிறைவேறினால் விவசாயம் அழியும், நிலத்தடி நீர்மட்டம் பாழாகும் என தகவல் பரவியுள்ளது.

முதலில் ஒரு கிராமம் சார்ந்த பிரச்சினையாக மட்டுமே கருதப்பட்ட நிலையில் கடந்த 19-ந்தேதி முதல் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிரான போராட்டம் மாநிலம் முழுவதும் தீப்பொறியாய் பரவியது.

ஆங்காங்கே கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். திட்டம் நிறைவேற்றப்படும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 4 இடங்களில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் தமிழகத்தையே திரும்பி பார்க்க செய்துள்ளது.

விவசாயிகள், கிராம மக்கள் மட்டும் இந்த திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து வந்தநிலையில் அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் இணைந்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு இணைந்தது போல் சமூக வலைதளங்கள் மூலம் அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைக்கப்பட்டனர்.



இதன் எதிரொலியாக யாரும் எதிர்பார்க்காத வகையில் நெடுவாசல் கிராமமே திக்குமுக்காடும் வகையில் போராட்டம் தீவிரம் அடைந்தது.

சென்னை, கோவை, புதுச்சேரி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஐ.டி. நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் திரண்டனர்.

திரைத்துறையினர், வணிகர் சங்கங்கள் என நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.

நெடுவாசலில் குலமங்கலம், மாங்காடு, வடகாடு, ஆலங்குடி, ஆவணம், புள்ளான்விடுதி, கீரமங்கலம், மறமடக்கி, வாணக்கன்காடு, வெட்டான்விடுதி உள்பட 100 கிராமங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதன்படி இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் நடத்துவது, பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்வது, தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திட்டத்தை தடை செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள காவிரி பாசன பகுதிகளை ஒருங்கிணைந்த வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்பட அனைத்து அடையாள அட்டைகளையும் அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட தலைநகரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, வீட்டின் முன்பு அகல் விளக்குகளை ஏற்றியும் கருப்பு கொடியேற்றியும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே மத்திய அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு குறைந்த அளவே இடம் கையகப்படுத்தப்படும், நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படாது, 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத மாணவர்கள் - இளைஞர்கள் மற்றும் நெடுவாசல் கிராம போராட்ட குழுவினர் எந்தவித சமரசத்திற்கும் இடம் இல்லை. எத்தனை நாட்கள் ஆனாலும் இந்த திட்டத்தை நிறுத்தினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Similar News