புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து கிராம மக்கள் தொடர் போராட்டம்
புதுக்கோட்டை:
தமிழகத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்ட மீத்தேன் வாயு, ஷேல் கியாஸ் உள்ளிட்ட திட்டங்கள் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.
இந்த திட்டம் கடந்த காங்கிரஸ் ஆட்சியிலேயே தொடங்கப்பட்டு அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால் போதிய நிலம் கையகப்படுத்துதல், தனியார் நிலங்களை குத்தகைக்கு எடுத்தல் உள்ளிட்டவைகளால் தள்ளிப்போனது. தற்போதைய மத்திய அரசு திட்டம் செயல்படுத்த அனுமதி வழங்கியதால் போராட்டம் வெடித்துள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாய நிலங்கள் அழியும், நெடுவாசல் கிராமத்தையொட்டிய சுமார் 50 கி.மீ. தூரத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் பாழாகும் என்ற அச்சம் இருப்பதால் இந்த திட்டத்தை கைவிடவேண்டும் என்று அரசியல் கட்சிகள் முதல் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலத்தின் அருகே நேற்று முன்தினம் முதல் பந்தல் அமைத்து, அதில் அமர்ந்து பெண்கள், மாணவ- மாணவிகள், பொது மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் குறித்து சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நூற்றுக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.
நேற்று விடுமுறை தினம் என்பதால் அப்பகுதி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்துசெய்யும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், அடுத்த கட்டமாக உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே நெடுவாசலில் இயற்கை எரிவாயு எடுக்க திட்டமிடப்பட்டுள்ள நிலங்களை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை கலெக்டர் கணேஷ், சிவகங்கை தொகுதி எம்.பி. செந்தில்நாதன், உதவி கலெக் டர் அம்ரீத் மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளையும் சந்தித்து பேசினர். அப்போது, இந்த திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது என்று அவர்களிடம் அமைச்சர் கூறினார்.
டெல்டா மாவட்டத்தில் முன்பு மீத்தேன் பிரச்சினை ஏற்பட்ட போது முதல்- அமைச்சர் ஜெயலலிதா தமிழக விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் திட்டத்திற்கு தடை விதித்தார். அதேபோல தற்போது ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டம் இப்பகுதி விவசாயிகளை பெரிதும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தமிழக விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சியைச் சேர்ந்த தண்ணீர் அமைப்பின் தலைவர் நீலமேகம் என்பவரின் தலைமையில் 8 பேர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் நெடுவாசல் கிராமத்திற்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி சென்றனர்.
அப்போது பொன்மலையைச் சேர்ந்த சதிஷ்குமார், சபரி, அபியா, ராஜசேகர், கிருஷ்ணமூர்த்தி, லால்குடியைச் சேர்ந்த அசு ராஜ் ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் ஓட்டிச் சென்ற 4 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். கைதான 7 பேரும் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டனர்.