செய்திகள்

சிதம்பரத்தில் பிளஸ்-1 மாணவியை தாக்கிய தலைமை ஆசிரியை: போலீசார் விசாரணை

Published On 2017-02-22 16:00 IST   |   Update On 2017-02-22 16:00:00 IST
பள்ளி பாடத்தை சரியாக கவனிக்காததால் பிளஸ்-1 மாணவியை தலைமை ஆசிரியை அடித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம்:

சிதம்பரம் கீழரத வீதியை சேர்ந்தவர் ஜான்கென்னடி. இவரது மகள் பூஜா(வயது 16). சிதம்பரம் கனகசபை நகரில் உள்ள மெட்ரிகுலேசன் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். நேற்று மதியம் வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

அப்போது பள்ளி பாடத்தை பூஜை சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியை வில்லியம் ஷீபா பிரவுனிடம் வகுப்பு ஆசிரியை புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து மாணவி பூஜாவை தலைமை ஆசிரியை அழைத்து அவரை திட்டி பிரம்பால் கை, கால்களில் தாக்கியதாக தெரிகிறது.

மாலையில் வீட்டுக்கு திரும்பிய பூஜா தலைமை ஆசிரியை தன்னை தாக்கியதாக தந்தை ஜான்கென்னடியிடம் கண்ணீர் மல்க கூறினார்.

இதுதொடர்பாக சிதம்பரம் நகர போலீசில் ஜான்கென்னடி புகார் செய்தார். இதையடுத்து அந்த மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு இன்று காலை போலீசார் சென்றனர். நடந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியை வில்லியம் ஷீபா பிரவுனிடம் விசாரணை நடத்தினர்.

தாக்குதலில் காயம் அடைந்த மாணவி பூஜா சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News