செய்திகள்

விருத்தாசலம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ஜெயலலிதா படம் உடைப்பு: மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 100 பேர் கைது

Published On 2017-02-20 11:22 GMT   |   Update On 2017-02-20 11:22 GMT
ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்டக்கூடாது என்று மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்தவர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம்:

ஊழல் வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா படத்தை பொதுஇடங்களில் வைக்கக்கூடாது, பள்ளி பாடபுத்தகங்களில் இருந்து ஜெயலலிதா படத்தை நீக்க வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்டக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலத்தில் போராட்டம் நடைபெறும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைசெல்வன் அலுவலகம் முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பினர் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ தலைமையில் இன்று திரண்டனர்.

திடீரென்று அவர்கள் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த ஜெயலலிதாவின் படத்தை உடைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

பின்னர் மக்கள் அதிகாரம் அமைப்பினர் எம்.எல்.ஏ.அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகார அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் போலீசாருக்கும், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

Similar News