மொடக்குறிச்சியில் அடிப்படை வசதிகள் கோரி வி.சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மொடக்குறிச்சி நால்ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை ஈரோடு மாவட்ட அமைப்பாளர் தனவிஜயன் தலைமை தாங்கினார். மொடக்குறிச்சி தொகுதி துணை செயலாளர் கமலநாதன் வரவேற்றார். மண்டல செயலாளர் விநாயகமூர்த்தி, மாநில துணை பொது செயலாளர் கனிஅமுதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவர் பதவி சுழற்சி முறையில் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும், மொடக்குறிச்சி நால் ரோட்டில் பயணிகள் நிழற் குடை அமைக்க வேண்டும், மொடக்குறிச்சி திருவள்ளுவர் வீதி மயானத்திற்கு சுற்றுச் சுவர் மற்றும் எரிமேடை அமைத்து தரவேண்டும்.
களத்துமின்னப்பாளையம் காலனியில் உள்ள பிரச்சினைகளான குடிநீர் வசதி, பொதுக்கழிப்பிடம், சமுதாயகூடம் உள்பட கோரிக்கைகளை உடனடி யாக நிறைவேற்ற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக மொடக்குறிச்சி, களத்து மின்னப் பாளையம் உள்பட பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.