செய்திகள்

பு.புளியம்பட்டி அருகே லாரி மீது அரசு பஸ் மோதி விபத்து: 10 பயணிகள் படுகாயம்

Published On 2017-02-11 10:09 GMT   |   Update On 2017-02-11 10:09 GMT
பு.புளியம்பட்டி அருகே இன்று அதிகாலை நின்ற லாரி மீது அரசு பஸ் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பு.புளியம்பட்டி:

செங்கோட்டையில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு நேற்று இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டு வந்தது.

இந்த பஸ் இன்று (சனிக்கிழமை)அதிகாலை 4 மணி அளவில் பு.புளியம்பட்டி அருகே உள்ள காளி பாளையம் அருகே வந்தது.

இங்கு ரோட்டு ஓரத்தில் ஒரு லாரி நின்று கொண்டு இருந்தது . கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகால் இருந்து திருப்பூருக்கு சிமெண்ட் பாரம் ஏற்றி சென்ற இந்த லாரியில் திடீர் என்று டீசல் தீர்ந்து விட்டது.

இதனால் டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு டீசல் வாங்குவதற்காக சென்று விட்டார்.

இந்த லாரி மீது செங்கோட்டையில் இருந்து வந்த அரசுபஸ் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி கண்ணாடி உடைந்து பஸ்சும் சேதம் அடைந்தது,

இந்த விபத்தில் பஸ்சின் டிரைவர் கோபியைசேர்ந்த ரவிக்குமார், பு.புளியம்பட்டியை சேர்ந்த கண்டக்டர் கோபால் ராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

மற்றும் பஸ்சில் பயணம் செய்த சுமதி (வயது 29), நந்தினி (25) பூப்பாண்டி, முனியாண்டி, பாண்டியன், காளிதாஸ் பேச்சிமுத்து, மகாராஜன் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து பு.புளியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News