செய்திகள்

செய்தியாளர்கள் மீது தாக்குதல்: தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. விளக்கம்

Published On 2017-02-11 04:32 GMT   |   Update On 2017-02-11 04:32 GMT
அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கூவத்தூர் தனியார் நட்சத்திர விடுதியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து அதிமுகவின் தோப்பு வெங்கடாசலம் விளக்கம் அளித்துள்ளார்.
காஞ்சிபுரம்:

தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஏதுவாக அதிமுக எம்எல்ஏக்கள் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நட்சத்திர விடுதியில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு எம்எல்ஏக்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என தகவல் வழங்கியுள்ளனர். 

இந்நிலையில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டது குறித்து அதிமுகவை சேர்ந்த தோப்பு வெங்கடாசலம் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது. 

கூவத்தூரில் நாங்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்கிறோம். மக்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவதூறு பரப்பப்படுகிறது. பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் கொடுக்கவில்லை. 

மேவும் 129 எம்எல்ஏக்களும் செய்தியாளர்களை சந்திக்க தயாராக உள்ளனர். செய்தியாளர்கள் மீது யார் தாக்குதல் நடத்தினார்கள் என்பது தெரியாது. நாங்கள் தங்கியிருப்பதை பிடிக்காத சிலர் தான் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆளுநர் அழைத்தால் உடனடியாக எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை நிரூபிப்போம், செய்தியாளர்கள் எம்எல்ஏக்களை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Similar News