செய்திகள்

பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 2 மாணவர்கள் கீழே தவறி விழுந்து பலி

Published On 2017-02-10 14:06 IST   |   Update On 2017-02-10 14:06:00 IST
பஸ் படிக்கட்டில் பயணம் செய்த 2 மாணவர்கள் கீழே தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதூப்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தென்னலூரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் வேணுகோபால் (வயது 15). தெரசாபுரத்தில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று மாலை அவர் பள்ளி முடிந்து அரசு பஸ்சில் (எண்.583) ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் வேணுகோபால் படிக்கட்டில் நின்று பயணம் செய்தார்.

தெரசாபுரம் கூட்டுச் சாலை அருகே வந்தபோது வேகத்தடையில் பஸ் ஏறி இறங்கியது. இதில் நிலை தடுமாறிய வேணுகோபால் தவறி கீழே விழுந்தார். பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்தை தடுக்க பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் அதிகமாக பயணம் செய்யும் காலை, மாலை நேரங்களில் வல்லக்கோட்டை - ஸ்ரீபெரும்புதூர் இடையே கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேடவாக்கத்தை அடுத்த கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரதீப் (16). அருகில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

கடந்த 7-ந் தேதி பள்ளி முடிந்து மாநகர பஸ்சில் (எம்14) வந்தார். படிக்கட்டில் பயணம் செய்த அவர் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

அவருக்கு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பிரதீப் பரிதாபமாக இறந்தார்.

Similar News