செய்திகள்
விவசாயி ராஜேந்திரன்.

அம்மாபேட்டை அருகே பருத்தி பயிர் கருகியதால் மாரடைப்பில் விவசாயி மரணம்

Published On 2017-02-09 16:19 IST   |   Update On 2017-02-09 16:19:00 IST
அம்மாபேட்டை அருகே பருத்தி பயிர் கருகியதால் மாரடைப்பில் விவசாயி மரணமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அம்மாபேட்டை:

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஆரியகவுண்டனூர் கலர்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது54). விவசாயி.

இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் பருத்தி சாகுபடி செய்திருந்தார். கடும் வறட்சியால் பருத்தி கருக தொடங்கியது. இதனால் தனது நிலத்தில் 900 அடிவரை போர் தோண்டினார். அப்படி இருந்தும் போரில் தண்ணீர் இல்லை. இதற்கிடையே பருத்தி பயிர்கள் முற்றிலும் கருகி விட்டது.

இதனால் ராஜேந்திரன் மிகவும் மன வேதனையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு அவருக்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரது மனைவி சாந்தி 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். ஆம்புலன்சு வேனில் ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News