செய்திகள்

தறிகெட்டு ஓடிய மாநகர பஸ் சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது மோதியது: 10 பேர் காயம்

Published On 2017-02-07 14:39 IST   |   Update On 2017-02-07 14:40:00 IST
பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடி சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது மாநகர பஸ் மோதி 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தாம்பரம்:

தாம்பரத்தை அடுத்த கடப்பேரி அருகே உள்ள சிக்னலில் இன்று காலை ஏராளமான வாகனங்கள் நின்று கொண்டு இருந்தன.

அப்போது தாம்பரத்தில் இருந்து பிராட்வே நோக்கி மாநகர பஸ் (எண்.21ஜி) வந்தது. சிக்னல் அருகே வந்த போது திடீரென பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை.

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் வண்டியில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். பஸ்சில் இருந்த பயணிகளும் பயத்தில் கீழே குதித்து அலறியடித்து ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பஸ் மோதியதில் சிக்னலில் நின்ற 5 மோட்டார் சைக்கிள்கள், மினி லாரி உள்பட 9 வாகனங்கள் சேதம் அடைந்தன. 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் 2 பேர் மேல்சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விபத்து நடந்ததும் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள், மாநகர பஸ் டிரைவரை சுற்றி வளைத்து தாக்கினர். பஸ்சில் பிரேக் பிடிக்காததை ஆரம்பத்திலேயே கவனிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்பட வில்லை. தறிகெட்டு ஓடிய மாநகர பஸ், வாகனங்கள் மீது மோதிய சிறிது நேரத்தில் நின்றதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

Similar News