செய்திகள்

மேடவாக்கம் அருகே பள்ளி வேன் மோதி சிறுமி பலி

Published On 2017-02-07 14:17 IST   |   Update On 2017-02-07 14:17:00 IST
மேடவாக்கம் அருகே பள்ளி வேன் மோதி சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்:

மேடவாக்கம் அருகே உள்ள கவுரிவாக்கம், வேம்புலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகரன். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களது மகள்கள் திதிக்ஷா, சமிக்ஷா (வயது 2½).

சிறுமி திதிக்ஷா அருகில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். தினமும் வேனில் பள்ளிக்கு செல்வது வழக்கம். அவளை தாய் ஈஸ்வரி, குழந்தை சமிக்ஷாவுடன் சென்று வழியனுப்பி வந்தார்.

இன்று காலை வீட்டு முன்பு சமிக்ஷா விளையாடிக் கொண்டிருந்தாள். இதனால் அவளை அங்கேயே விட்டு விட்டு ஈஸ்வரி, மற்றொரு மகளான திதிக்ஷாவை பள்ளி வேனில் ஏற்றுவதற்காக அழைத்து சென்றார்.

வேன் வந்தவுடன் அருகில் இருந்த தாயிடம் செல்வதற்காக சிறுமி சமிக்ஷா ஓடி வந்தாள். இதனை தாய் ஈஸ்வரியும், வேன் டிரைவரும் கவனிக்கவில்லை.

மாணவ- மாணவிகள் ஏறியதும் வேனை டிரைவர் இயக்கினார். அப்போது முன்னாள் நின்ற சிறுமி சமிக்ஷா மீது வேனின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவள் பரிதாபமாக இறந்தாள். இதனை பார்த்து தாய் ஈஸ்வரி கதறி துடித்தார்.

விபத்து நடந்ததும் வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News