செய்திகள்

தட்டம்மை தடுப்பூசி போட்ட 4 மாணவ-மாணவிகளுக்கு மயக்கம்

Published On 2017-02-07 13:14 IST   |   Update On 2017-02-07 13:14:00 IST
வேதாரண்யம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தட்டம்மை தடுப்பூசி போட்ட 4 மாணவ-மாணவிகளுக்கு மயக்கம் மற்றும் அரிப்பு ஏற்பட்டது. வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று வேதாரண்யம் தாலுகாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.

வேதாரண்யம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் நிஷாந்தினி (வயது 15), சவுந்தர்யா (15), வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர் ராகேஷ் (14), கரியாப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர் சபாபதி (15) ஆகிய 4 பேருக்கும் பள்ளியில் தட்டம்மை, ரூபெல்லா என்ற தடுப்பூசி போடப்பட்டது.

சிறிது நேரத்தில் இவர்கள் 4 பேருக்கும் மயக்கம் மற்றும் அரிப்பு ஏற்பட்டது. உடனே ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளை வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Similar News