செய்திகள்
சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி
சிதம்பரம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே உள்ள புதுக்குப்பம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 36), மீனவர். நேற்று நள்ளிரவு இவர் அதே பகுதியை சேர்ந்த 3 மீனவர்களுடன் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
சிறிது தூரத்தில் படகு சென்றுகொண்டிருந்தபோது முகத்துவாரத்தில் உள்ள சிமெண்டு கட்டையில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படகு நிலைதடுமாறி கடலில் கவிழ்ந்தது. ஆறுமுகம் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் நீந்தி கரைக்கு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை புதுக்குப்பம் கடற்கரை யோரம் ஆறுமுகத்தின் உடல் ஒதுங்கியது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.