காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள ஆத்தங்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்தவர் வள்ளிக்கண்ணு (வயது70). இவர் மட்டும் வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம கும்பல் பின்வாசல் வழியாக வீட்டிற்குள் புகுந்தது.
இன்று காலை வள்ளிக் கண்ணு வீட்டின் பின்புறம் சென்றார். அப்போது மறைந்து இருந்த மர்ம கும்பல் அவரை கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த வள்ளிக்கண்ணு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அந்த கும்பல் வள்ளிக்கண்ணு கழுத்தில் கிடந்த நகைகளை கொள்ளையடித்து கொண்டு தப்பியது. நீண்ட நேரமாகியும் முன்பக்க கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் குன்றக்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், டி.எஸ்.பி.க் கள் கார்த்திகேயன், பாஸ்கரன், முருகன், குன்றக்குடி இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொலை நடந்த இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்ப நாய் லைக்கா வரவழைக்கப்பட்டது.
அண்மையில் தேவகோட்டை பகுதியில் தனியாக வசித்து வந்த ஒரு மூதாட்டியை மர்ம கும்பல் கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்றது. அந்த பரபரப்பு அடங்கும் முன் மற்றொரு கொலை நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.