சிவகங்கை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்: கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
சிவகங்கை:
சிவகங்கை தாலுகா முனியாண்டிபட்டியை சேர்ந்தவர் விஜய் (வயது22), கல்லூரி மாணவர். இவர், தனது அத்தை ஆரம்மாள் (48) உடன் மோட்டார் சைக்கிளில் சிவகங்கை சென்றார்.
பின்னர் இருவரும் அங்கிருந்து ஊர் திரும்பி கொண்டிருந்தனர். தேவானிபட்டி விலக்கு பகுதியில் அவர்கள் வந்தபோது, எதிரே ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இந்த இரு வாகனங்களும் எதிர் பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பலத்த காயம் அடைந்த விஜய், ஆரம்மாள் ஆகியோர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே விஜய் பரிதாபமாக இறந்தார். ஆரம்மாள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் பலியான மற்றொருவரின் பெயர் பிரபு (45). மேலூர் அருகே உள்ள உத்தபட்டியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி ஒரு ஆண், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.