செய்திகள்

ரூ.2000 நோட்டை ஜெராக்ஸ் எடுத்து ஏமாற்றிய பெண்

Published On 2017-01-30 15:23 IST   |   Update On 2017-01-30 15:23:00 IST
வண்ணாரப் பேட்டையில் 2000 ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்த பெண் நகை வாங்கிய போது போலீசாரிடம் சிக்கினார்.
ராயபுரம்:

பழைய வண்ணாரப்பேட்டை முத்தையா மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவர் அதே பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் வாடகைக்கு இருப்பவர் சிவகாமி (45).

நேற்று மாலை சிவகாமி, பரமசிவத்தின் நகை கடைக்கு வந்தார். 2 கிராம் தங்க நகை வாங்கினார். அதற்கான பணத்தை சிவகாமி கொடுத்தார். அந்த பணத்தை பரமசிவம் சோதனை செய்து பார்த்தார். அதில் இரண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கலர் ஜெராக்ஸ் எடுத்து இருப்பது தெரியவந்தது.

உடனே பரமசிவம் இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் நகை வாங்க கலர் ஜெராக்ஸ் பணத்தை கொடுத்து ஏமாற்றிய சிவகாமியை பிடித்து விசாரித்தனர்.

நான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல்மலையனூர் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பினேன். மூலகொத்தளம் வரும் போது அங்குள்ள பஸ் நிலையத்தில் ஒரு பெண்ணின் கைப்பை கிடந்தது. அதை எடுத்து பார்த்த போது 4 இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் இருந்தது. அதில் 2 எடுத்து நகை வாங்க முயன்ற போது சிக்கி கொண்டேன் என்று கூறினார்.

உடனே போலீசார் அந்த கைப்பையில் இருந்த இரண்டு 2 ஆயிரம் ரூபாய் ஜெராக்ஸ் நோட்டுக்களை கைப்பற்றினர்.

மேலும் கைப்பையில் கொடுங்கையூர் சுஜாதா என்ற முகவரி இருந்தது. அங்கு சென்று பார்த்த போது சுஜாதா என்ற பெயரில் யாரும் இல்லை என்று தெரியவந்தது.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகாமி ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து இதை போல வேறு யாரிடமும் ஏமாற்றினாரா? அல்லது வேறு யாரும் இவருக்கு கள்ள நோட்டை கொடுத்தார்களா? இதன் பின்னணியில் யார் உள்ளார்கள்? என பல கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.

Similar News