செய்திகள்

மேலூரில் மாட்டுவண்டி பந்தயம்: அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார்

Published On 2017-01-29 10:10 GMT   |   Update On 2017-01-29 10:10 GMT
மேலூர் - சிவகங்கை ரோட்டில் மாட்டுவண்டி பந்தயம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சாமி ஏற்பாட்டில் இன்று நடந்தது. இப்போட்டியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

மேலூர்:

மேலூரில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதை காண லட்சக்கணக் கான பொது மக்கள் வந்திருந்தனர்.

மதுரை அருகே மேலூரில் உள்ள மேலூர் - சிவகங்கை ரோட்டில் மாட்டுவண்டி பந்தயம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சாமி ஏற்பாட்டில் இன்று நடந்தது. இப்போட்டியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

இந்த மாட்டுவண்டி பந்தயம் 2 பிரிவுகளாக நடந்தது. முதல்பிரிவு போட்டியில், பெரிய மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. மதுரை, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்பட தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 21 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன.

இந்த போட்டி 8 மைல் தூரத்திற்கு நிர்ணயிக்கப்பட் டிருந்தது.

இந்த போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் விரா மதி பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மாட்டுவண்டி முதல் பரிசை பெற்றது. இவருக்கு ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-வது பரிசை அவனியாபுரத்தைச் சேர்ந்த எஸ்.கே.ஆர். என்பவருக்கும் 3-வது பரிசு பரவையைச் சேர்ந்த சிவகாளி என்பவருக்கும் கிடைத்தது.

அதன் பின்னர் சின்ன மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இம்மாட்டு வண்டி பந்தயத்திற்கு 6 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இப்போட்டியில் 26 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன.

கடந்த 2 வருடமாக நடைபெறாமல் இருந்த இப்போட்டி இந்தாண்டு நடைபெற்றதால் இப்போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Similar News