செய்திகள்

கரூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான தட்டம்மை தடுப்பூசி முகாம் 6-ந் தேதி முதல் நடக்கிறது

Published On 2017-01-28 11:30 GMT   |   Update On 2017-01-28 11:30 GMT
இந்தியாவில் தட்டம்மை ரூபெல்லா பாதிப்புகள் அதிக அளவில் உள்ளதால் 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கும் முகாம் பிப்ரவரி 6ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கரூர்:

இந்தியாவில் தட்டம்மை ரூபெல்லா பாதிப்புகள் அதிக அளவில் உள்ளதால் 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கும் முகாம் பிப்ரவரி 6ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கரூர் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தலைமை வகித்து மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் கூறியதாவது:-

இந்தியாவில் தட்டம்மை ரூபெல்லா பாதிப்புகள் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிக அளவில் உள்ளதால் 9 மாத குழந்தை முதல் 15 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கும் திட்டம் தமிழ்நாடு உட்பட 2 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் பிப்ரவரி மாதம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என 973 பள்ளிகளில் பயிலும் குழந்தைகள், 1078 அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் 15 வயதிற்குட்பட்ட பள்ளி செல்லாத குழந்தைகள் என 2,18,558 குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமானது முதல் கட்டமாக அனைத்து பள்ளிகளிலும், 2ம் கட்டமாக அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், 3ம் கட்டமாக இவ்விரண்டிலும் விடுபட்ட குழந்தைகளுக்கும் பிப்ரவரி 6ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஆகையால் இத்திட்டத்தினை முழுமையாக செயல்படுத்தும் விதமாக முக்கிய துறைகளான பள்ளி கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறையினரும் தங்களது மேலான ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Similar News