செய்திகள்

போலீஸ் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்: இயக்குனர் கவுதமன் கைது

Published On 2017-01-28 09:32 GMT   |   Update On 2017-01-28 09:32 GMT
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே போலீஸ் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர் கவுதமன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

ஜல்லிக்கட்டு போராட்ட கலவரத்தில் போலீஸ் அத்துமீறலை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும், வள்ளுவர் கோட்டம் அருகே மாணவர் அமைப்பினருடன் சேர்ந்து இயக்குனர் கவுதமன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தார்.

இதற்கு போலீஸ் அனுமதியும் முதலில் கிடைத்து இருந்தது. நேற்று இரவு போலீசார் இந்த அனுமதியை ரத்து செய்து போராட்டத்தை அனுமதிக்கவில்லை

போலீஸ் தடையை மீறி கவுதமன் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாணவர்களும், விவசாய பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கவுதமன் பேசும்போது, ‘மாணவர்கள் போராட்டத்தில் போலீசாரே திட்டமிட்டு வன்முறை சம்பவத்தை அரங்கேற்றினார்கள். இது கண்டிக்கத்தக்கது.



இதுபோன்ற செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். கைதான மாணவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். இதுதொடர்பாக போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து மனு கொடுப்பேன்’ என்றார்.

ஜல்லிக்கட்டு நடைபெற நிரந்தர சட்டமாவதை உறுதி செய்ய வேண்டும். பீட்டாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்பட 11 தீர்மானங்கள் போராட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கவுதமன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Similar News