செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்

Published On 2017-01-28 00:41 GMT   |   Update On 2017-01-28 00:41 GMT
டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை:

டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கடலோர பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

நேற்று முன்தினம் தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது தற்போது தமிழக கடலோர பகுதிகளில் நிலை கொண்டுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (இன்று) தமிழகம் முழுவதும் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரங்களில் அதிக இடங்களில் மழை பெய்யும்.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் நெய்வேலியில் -10 செ.மீ மழையும், பரங்கிப்பேட்டையில்- 9 செ.மீ, சேத்தியாதோப்பு 8 செ.மீ, திருவடைமருதூர், கும்பகோணத்தில் தலா 7 செ.மீ, கொள்ளிடம், விருத்தாசலம்- 6 செ.மீ, ஆடுதுறை, காரைக்கால், சூரக்குடி, சிதம்பரம், சீர்காழியில் தலா 5 செ.மீ, கொடவாசல் - 4 செ.மீ மழையும் பெய்துள்ளது. குறிப்பாக, கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் அதிக இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News