செய்திகள்

தை அமாவாசை: வேதாரண்யம் கடலில் பக்தர்கள் புனித நீராடல்- முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Published On 2017-01-27 17:05 GMT   |   Update On 2017-01-27 17:05 GMT
தை அமாவாசையையொட்டி வேதாரண்யத்தில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்பு பெற்றது. இன்று தை அமாவாசை என்பதால் வேதாரண்யம் கடலில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கோடியக்கரை அக்னிதீர்த்தம் ஆதி சேது சித்தர் கட்டம் கடற்கரை, சன்னதி கடல்  ஆகிய பகுதிகளில் நீராடினார்கள். பின்னர் கோவிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்த குளத்தில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர். வேதாரண்யம் பகுதியில் விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் பக்தர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

தஞ்சை மாவட்டம் திருவையாறிலும் இன்று தை அமாவாசையையொட்டி பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இங்கு ஆற்றில் தண்ணீர் இல்லாததால் போர்வெல் அமைத்து ஆயில் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து  பொதுமக்கள் புனித நீராடினர். இங்கும் கூட்டம் குறைவாக இருந்தது. இதேபோல் கும்பகோணம் மகாமக குளம், காவிரி படித்துறை ஆகியவற்றிலும் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.

மயிலாடுதுறை துலா கட்டம், சீர்காழி சட்டைநாதர் கோவில் பிரம்ம தீர்த்த குளம், பூம்புகார் கடல் ஆகியவற்றிலும் பக்தர்கள் நீராடி தர்ப்பணம் செய்தனர்.

தை அமாவாசையையொட்டி  திருவாரூர், தியாகராஜர் கோவில் அருகே உள்ள கமலாலய குளத்தில் இன்று ஏராளமான பொதுமக்கள்  புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். பின்னர் தியாகராஜர் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News