செய்திகள்

நாகூர் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி

Published On 2017-01-25 15:49 IST   |   Update On 2017-01-25 15:49:00 IST
நாகூர் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகையை அடுத்த நாகூர் ஆரியநாட்டுத்தெரு கீழபட்டினச்சேரி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் முத்துராஜா (வயது31). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து (42), முத்துவீரன், முத்துக்குமார், கலையரசன், சவுந்தரராஜன் ஆகிய 6 பேரும் நேற்று அதிகாலை நாகூர் வெட்டாற்றில் இருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர்.

மீன்பிடித்து விட்டு நேற்று மாலை கரை திரும்பியுள்ளனர். அப்போது கரையில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் மீனவர்கள் வந்து கொண்டிருந்தபோது, காற்று வேகமாக வீசியதாலும், கடல் சீற்றமாக இருந்ததாலும் அவர்களது படகு கடலில் கவிழ்ந்தது.

அப்போது அந்த பகுதியில் கரையில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் படகு கவிழ்ந்ததை கண்டவுடன் உடனே மற்றொரு படகில் விரைந்து சென்றனர். பின்னர் கடலில் தத்தளித்து கொண்டிருந்த 6 மீனவர்களையும் மீட்டு படகில் ஏற்றிக்கொண்டு கரை திரும்பினர். பின்னர் கரையில் வந்து பார்த்தபோது வீரமுத்து இறந்திருந்தது தெரியவந்தது. மற்ற 5 மீனவர்களும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

உயிரிழந்த வீரமுத்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நாகை கடலோர காவல் படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News