செய்திகள்

களக்காடு அருகே காட்டு பன்றிகளால் வாழைகள் நாசம் - விவசாயிகள் கவலை

Published On 2017-01-18 12:29 GMT   |   Update On 2017-01-18 12:29 GMT
களக்காடு அருகே தோட்டத்துக்குள் புகுந்த காட்டு பன்றிகள் அங்கிருந்த வாழைகளை சாய்த்து, நாசம் செய்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
களக்காடு:

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை தலையணை மலையடிவாரத்தில் கள்ளியாறு, சிவபுரம், பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்தப்பகுதியில் களக்காடு புதுத்தெருவை சேர்ந்த விவசாயி சுரேஷ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் அந்த தோட்டத்துக்குள் காட்டு பன்றிகள் புகுந்தன. அங்கிருந்த வாழைகளை சாய்த்து, நாசம் செய்துள்ளது. இதில் 73 வாழைகள் நிர்மூலமானது. இவைகள் ஏத்தன், ரசகதலி வகைகளை சேர்ந்தவை ஆகும். இதனால் இவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சமீபகாலமாக இந்த பகுதியில் சிறுத்தை, கடமான், கரடி உள்ளிட்ட வன விலங்குகளில் அட்டகாசம் தலை தூக்கி வருகிறது. மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில் வனவிலங்குகள் வாழைகள் மற்றும் விவசாய பயிர்களை நாசம் செய்து வருவது விவசாயிகளுக்கு கவலையை கொடுத்துள்ளது.

தலையணை பகுதியில் காட்டு யானைகள் தங்கியுள்ளன என களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். இதை காரணம் காட்டி காணும் பொங்கல் அன்று கூட தலையணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்தது குறிப்பிடத்தக்கது.

முகாமிட்டுள்ள யானைகள் தோட்டங்களுக்கு புகுவதை தவிர்க்க வனத்துறையினர் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

Similar News