செய்திகள்

ஊத்துக்கோட்டையில் ஓட்டலுக்குள் லாரி புகுந்தது: கணவன்-மனைவி உள்பட 5 பேர் தப்பினர்

Published On 2017-01-18 09:50 GMT   |   Update On 2017-01-18 09:51 GMT
ஊத்துக்கோட்டையில் ஓட்டலுக்குள் லாரி புகுந்ததில் அதிர்ஷ்டவசமாக கணவன்-மனைவி உள்பட 5 பேர் உயிர் தப்பினர். இதுகுறித்து சத்தியவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்துக்கோட்டை:

கும்மிடிப்பூண்டி, சிப்காட் பகுதியில் இருந்து ஆந்திரா மாநிலம் கோரூர் நோக்கி நேற்று இரவு லாரி சென்றது. டிரைவர் பாலாஜி வண்டியை ஓட்டினார்.

இன்று அதிகாலை 2 மணி அளவில் ஊத்துக்கோட்டை அருகே தாசுக்குப்பத்தில் லாரி வந்து கொண்டு இருந்தது. ஒரு வளைவில் திரும்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. திடீரென சாலை ஓரத்தில் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது.

இதில் ஓட்டலின் முன் பகுதியில் மோதியதில் ஓட்டல் முன்பு கட்டப்பட்டு இருந்த எருமைமாடு பலத்த காயம் அடைந்தது. லாரி டிரைவரும் படுகாயம் அடைந்தார்.

சேதம் அடைந்த ஓட்டலின் பின்புறம் உள்ள வீட்டில் அதன் உரிமையாளர் கோபால் குடும்பத்துடன் தங்கி உள்ளார். ஓட்டலுக்குள் லாரி புகுந்த போது கோபால், அவரது மனைவி கோவிந்தம்மாள், மகள் யமுனா, மகன் சதீஷ், கோவிந்தம்மாளின் தந்தை சுப்பிரமணி ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

லாரி மோதிய போது வீட்டின் சுவர் இடியாததால் அவர்கள் 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து சத்தியவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News