செய்திகள்

பாதுகாப்பு வழங்காததை கண்டித்து தீபா ஆதரவாளர்கள் மறியல்

Published On 2017-01-17 07:34 GMT   |   Update On 2017-01-17 07:34 GMT
தீபாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று கூறி அவரது ஆதரவாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை:

ஜெயலலிதா சமாதியில் இருந்து மெயின் ரோட்டுக்கு நடந்து வந்த தீபாவை அ.தி.மு.க. தொண்டர்கள் மீண்டும் மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்கள் உற்சாகத்தால் தீபா திணறியபடிதான் காருக்குள் ஏற முடிந்தது.

அதன் பிறகும் தீபாவால் அங்கிருந்து எளிதாக புறப்பட்டுச் செல்ல இயலவில்லை. சுமார் 5 நிமிடம் தொண்டர்கள் வெள்ளத்தில் சிக்கி மிகவும் மெல்ல கார் ஊர்ந்து சென்றது. தீபா சென்றபோது அவரது ஆதரவாளரகள் முண்டியடித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பலர் கீழே விழுந்தனர்.

இதன் காரணமாக தீபாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று கூறி அவரது ஆதரவாளர்கள் ஆவேசம் அடைந்தனர். போலீசாருக்கு எதிராக கோ‌ஷமிட்டனர்.

இதையடுத்து தீபா ஆதரவாளர்கள் எம்.ஜி.ஆர். சமாதி முன்பு மெரீனா கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலையில் அமர்ந்ததால் போலீசாரால் அவர்களை உடனே அங்கிருந்து அகற்ற முடியவில்லை.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமரச பேச்சு நடத்தினார்கள். சுமார் 45 நிமிடங்கள் தீபா ஆதரவாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பாரிமுனை - சாந்தோம் இடையே போக்குவரத்து சுமார் 1½ மணி நேரம் முடங்கியது. நீண்ட நேரத்துக்குப் பிறகே தீபா ஆதரவாளர்கள் சமரசமாகி கலைந்து சென்றனர். அதன் பிறகு கடற்கரை சாலையில் போக்குவரத்து கொஞ்சம், கொஞ்சமாக சீரானது.

Similar News