செய்திகள்

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவது அறப்போராட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2017-01-16 06:32 GMT   |   Update On 2017-01-16 06:32 GMT
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவது அறப்போராட்டம் என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:

மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆந்திர மாநிலத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. அது அந்த மாநில அரசாங்கத்தின் நிலைப்பாடு. தமிழகத்தில் சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடுக்கிறார்கள். அது இந்த மாநில அரசின் நிலைப்பாடு.

ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என்ற தடைக்கு எதிராக தற்போது இளைஞர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவது என்பது தமிழர்களின் கோபத்தின் வெளிப்பாடு. இதுவும் ஒரு வகையான அறப்போராட்டம்.

பீட்டா அமைப்புகள் இந்திய கலாச்சாரம், தன்மை, பாரம்பரியம் மற்றும் உயிரினங்களை ஒழிக்க வேண்டும் என்று புகைப்படம் எடுத்து உச்சநீதிமன்றத்தில் கொடுத்து மிருகங்கள் வதைக்கப்படுவதாக கூறி ஜல்லிக்கட்டிற்கு தடை வாங்கி இருக்கிறார்கள்.

மேலும் இப்போது நடைபெறுகிற ஜல்லிக்கட்டை புகைப்படம் எடுத்து நிரந்தர ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கி விடுவார்கள். அதனால் இதனை ஜல்லிக்கட்டு என்று சொல்ல மாட்டேன். மக்கள் நடத்தும் அறப்போராட்டம்.

இந்த பிரச்சனை பா.ஜ.க. வினாலோ, மத்திய அரசாலோ ஏற்படவில்லை. இது நூறு சதவீதம் காங்கிரஸ், தி.மு.க. ஆட்சியில் இருந்த போது செய்த துரோகம்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பா.ஜனதா கடந்த வருடம் அனுமதி பெற்றது. தற்போது தி.மு.க.வும், காங்கிரசும் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்கள். ஒரு வருடமாக இவர்கள் யாரும் எதுவும் செய்யவில்லை. இப்போது போராட்டம் நடத்துகின்றனர். இவர்கள் பீட்டா அமைப்பு பின்னால் போய் விட்டார்களா?

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News