செய்திகள்

அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு

Published On 2017-01-16 06:21 GMT   |   Update On 2017-01-16 06:21 GMT
வாடிவாசல் அருகில் இளைஞர்கள் அவிழ்த்து விட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. இளைஞர்கள் சிலர் காளையை மடக்கி பிடிப்பதற்காக பின்னால் துரத்தினர். அதற்குள் போலீசார் காளையை விரட்டி சென்று பிடித்தனர்.
மதுரை:

தமிழர்களின் வீர விளையாட்டான பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம்கோர்ட்டு தடை விதித்துள்ளது.

இந்த தடையை மீறி போட்டியை நடத்துவோம் என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், அமைப்பாளர்களும் அறிவித்தனர்.

இதன்படி, மதுரை மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

அலங்காநல்லூர், பாலமேட்டில் கடந்த 2 நாட்களாக ஜல்லிக்கட்டு போட்டிகள் தடைகளை தாண்டி நடத்தி முடிக்கப்பட்டது.

மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு ஊர்வலத்தை நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. திண்டுக்கல், தேனி, நாகப்பட்டினம், தஞ்சை, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும் காளைகளை அவிழ்த்து விட்டு மாடுபிடி வீரர்கள் விரட்டி பிடித்தனர்.

காணும் பொங்கலான இன்று அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றதாகும். இன்று அதுபோன்று ஒரு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இன்று அதிகாலையிலேயே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் தொடங்கின. அலங்காநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் களை கட்டி காணப்பட்டன. ஜல்லிக்கட்டு காளைகள் தயார் நிலையில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. மாடுபிடி வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

இதனை தடுப்பதற்காக அலங்காநல்லூரில் ஆயிரக் கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போட்டி நடக்கும் திடல் காளைகள் அவிழ்த்து விடப்படும் வாடிவாசல் ஆகியவற்றின் அருகில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து சுற்றிலும் அரணாக நின்றி ருந்தனர். அப்பகுதி முழுவதுமே சீல் வைக்கப்பட்டிருந்தது.

ஜல்லிக்கட்டு போட்டி நடந்து விடக்கூடாது என்ப தில் போலீசார் உறுதியுடன் இருந்தனர். இதனால் திரும்பிய திசையெல்லாம் காளைளை கண்காணிப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு விழா ஏற்பாட்டாளர்களும், மாடுகளை அடக்குவதற்கு மாடுபிடி வீரர்களும் தயாராகவே இருந்தனர். போட்டியை காண ஆயிரக்கணக்கான பொதுமக்களும் திரண்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் காணப்பட்டது.

இதற்கிடையில் ஜல்லிக்கட்டு நடைபெறாவிட்டாலும், கோவில் காளைகளுக்கு வாடிவாசல் முன்புள்ள கோவிலில் வைத்து பூஜைகள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட போலீசார் ஒவ்வொரு காளையாக கொண்டுவர அனுமதித்தனர். அதனை தொடர்ந்து கோவில் காளைகள் குளிப்பாட்டி, அலங்கரிக்கப்பட்டு கோவிலுக்கு அழைத்து வரப்பட்டன. அங்கு வழிபாடுகள் முடிந்தது. அவை போலீஸ் பாதுகாப்போடு திருப்பி அனுப்பப்பட்டன.

இந்நிலையில் 9.40 மணி அளவில் வாடிவாசல் பகுதியில் சிலர் சிறிய கன்றுக் குட்டிகளை அவிழ்த்து விட்டனர். அவைகள் கூட்டத்துக்குள் துள்ளி குதித்து ஓடின.

இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நேரத்தில் வாடிவாசல் அருகில் ஒரு சிறிய சந்து வழியாக காளை ஒன்றை இளைஞர்கள் சிலர் திடீரென அவிழ்த்து விட்டனர்.

அந்த காளை சீறிப்பாய்ந்து ஓடியது. அப்போது அங்கு குவிந்து இருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இளைஞர்கள் சிலர் காளையை மடக்கி பிடிப்பதற்காக பின்னால் துரத்தினர்.

அதற்குள் போலீசார் காளையை விரட்டி சென்று பிடித்தனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய உற்சாகத்தில் இளைஞர்களும், போட்டி அமைப்பாளர்களும் காணப்பட்டனர்.

இதற்கிடையே வாடிவாசல் முன்பு திரண்டிருந்த பொதுமக்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் கோ‌ஷமிட்டனர். தடை செய்.... தடை செய்.... பீட்டா அமைப்பை தடை செய்.... அனுமதி கொடு... அனுமதி கொடு... ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடு... என்கிற கோ‌ஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து வாடிவாசலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். அங்குள்ள விநாயகர் கோவில் வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில் 300-க் கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக அலங்காநல்லூர் வரும், மதுரை ரோடு, ஊமச்சிகுளம் ரோடு, வாடிப்பட்டி ரோடு, அழகர்கோவில் ரோடு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்தபடியே போலீசார் வாகனங்களை கண்காணித்து வருகின்றனர்.

அலங்காநல்லூருக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. மோட்டார்சைக்கிள்கள், கார் உள்ளிட்ட எந்த வாகனங்களையும் போலீசார் ஊருக்குள் அனுமதிக்கவில்லை.

ஜல்லிக்கட்டு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூரில் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டு இருந்தது. அனைத்து கடைகளுமே அடைக்கப்பட்டிருந்தன.

இதனால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News